தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடுமாறு, திமுக ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அதேநேரம், வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ள நிலையில், 2011 தேர்தலின்போது தனது மனைவிக்கு 24.20 லட்சம் ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016ம் ஆண்டு தேர்தலில், 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது சந்தேகத்தை எழுப்புகிறது. ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வம் 6 மாதங்களில் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக அமைப்புச் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கொடுத்த புகாரை 3 மாதங்களாக விசாரிக்காதது ஏன்? என்று மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? என்றும், சேகர்ரெட்டி டைரியில் ஓபிஎஸ் பெயர் உள்ளதால், வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை வரும் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டது.