ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அடுத்த வேலம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அறிவழகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு தார்ணிகா(7) ஜெனிஸ்ரீ(5) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். வெண்ணிலாவுக்கு முன்பே விஜயலட்சுமி என்பவரை அறிவழகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அறிவழகன் – விஜயலட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அறிவழகன். சட்டரீதியாக விவாகரத்து கிடைக்கும் முன்பே வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் அறிவழகன்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் அறிவழகனுடன் சேர்ந்து வாழ விஜயலட்சுமி வேலம் கிராமத்தில் உள்ள அறிவழகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது என் வாழ்க்கை, என் பிள்ளைகள் வாழ்க்கை இப்படியாகிடுச்சே என கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு இன்று காலை கிளம்பினார்.
அவர் கோபத்தில் தனது அம்மா வீட்டுக்குத்தான் செல்வார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். அவர் வாலாஜா ரயில் நிலையத்திற்குச் சென்றவர் காட்பாடி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.