தற்கொலை செய்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் எனவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9- ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். கடந்த டிசம்பர் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சித்ரா பட்டுப்புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (05/02/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல, அவரது தொலைப்பேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கைகள், பிப்ரவரி 10- ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 11- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.