‘அம்மா, உனக்கு கடைசிக்காலம் வரை தினமும் ஒரு வேளை சாப்பாட்டை என் கையால்தான் ஊட்டி விடுவேன்’ என்ற மகளின் அளவு கடந்த பாசத்தால், 31 ஆண்டுகளாக தன் மகளின் கையால் சாப்பிட்டு வந்த தாய் திடீரென்று இறந்ததால், இறந்த தாயின் மாா்பில் விழுந்து தன் உயிரையும் மகள் மாய்த்துக்கொண்ட சம்பவம் குமாியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே காற்றாடிமுக்கு பகுதியைச் சோ்ந்த நடேசன் மனைவி வேலம்மாள் (78) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிாியை. இவா்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். ஒரே பெண் பிள்ளையான பகவதியம்மாளை (56) சிறு வயதில் இருந்தே தாயாா் வேலம்மாள் மிகுந்தப் பாசத்துடன் வளர்த்து வந்தார். அதே போல், மகள் பகவதியம்மாளும் வளர, வளர தாயார் மீது பிாியமாகவே இருந்து வந்தார்.
பகவதியம்மாளுக்கு திருமண வரன் பாா்த்தபோது கூட, தினமும் என் தாயாரை நான் பாா்க்க வேண்டும். அதற்கு வசதியாக வீட்டின் அருகில் வரன் பாருங்கள் என பகவதியம்மாள் கூறியதையடுத்து, வீட்டில் இருந்து 5 கி.மீ தூரத்தில் தலக்குளம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மணம் முடித்து வைத்தனா். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
பகவதியம்மாளுக்கு திருமணம் முடிந்த அடுத்த வாரத்திலிருந்தே, தனது வீட்டிலிருந்து தாயாருக்கு தினம் ஓரு வேளை, காலை அல்லது மதிய சாப்பாட்டை கொண்டு போய் அவரே ஊட்டி விட்டு வந்தார். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூட ஆச்சரியப்பட்டுள்ளனா். கணவன் வீட்டிலும் இதற்கு எந்த எதிா்ப்பும் காட்டவில்லை. அந்தளவு தாயும் மகளும் பாசத்தோடு இருப்பதை உறவினா்களும் ஊராரும் பெருமையோடு பேசி வந்தனா்.
இந்த சூழ்நிலையில் தான் வேலம்மாளுக்கு சில நாட்களாக உடல்நிலை சாியில்லாமல் இருந்தது. கடந்த 24 ஆம் தேதி மதியம், பகவதியம்மாள் தாயாருக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்றாா். மறுநாள் 25 ஆம் தேதி காலை, தாயாருக்கு டிபன் கொடுக்க தயாா் செய்து கொண்டிருந்த போது, அவாின் சகோதரா் போன் செய்து அம்மா இறந்துவிட்டார் எனக் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பகவதியம்மாள், உடனே தாயாரைப் பார்க்கச் சென்றார்.
தாயாாின் உடலைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தவரை உறவினர்கள் ஒருபுறம் தேற்றிக்கொண்டிருந்தனா். இந்நிலையில், திடீரென்று பகவதியம்மாள் தாயாாின் மாா்பில் விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்தாா். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினா்கள் பகவதியம்மாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும் இந்த காலக்கட்டத்தில் திருமணம் முடிந்தும் கடைசி வரை தாய், மகள் பாசத்துக்கு கொஞ்சமும் குறை இல்லாமல் வாழ்ந்த வேலம்மாளும் பகவதியம்மாளும் தாய், மகள் பாசத்துக்கு இந்தக் காலத்தின் உதாரணமாகிவிட்டனா் என்கின்றனா் ஊராா்.