Skip to main content

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணங்களை தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு பயன்படுத்த வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

 

vikiramaraja

 

பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து நேர்காணல் அளித்த போது கூறியதாவது, தேர்தல் ஆணையர்கள் கைப்பற்றிய பணங்கள்,  நகைகள்,  பாத்திர பண்டங்கள் எல்லாம் வணிகர்கள் உடையன.  அதை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேர்தல் ஆணையம் திருப்பி வழங்க வேண்டும்.அதற்கு மேலாக தமிழகத்திலேயே கைப்பற்றப்பட்ட பணங்களை தமிழகத்தினுடைய நீர் ஆதாரத்தை பெருக்கும்வகையாக ஏரி, குளங்களைச் சீரமைத்து இங்கு நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அந்த பணத்தை நேரடியாக பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
 

  
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது எங்களது இந்த மாநாட்டிற்குப் பிறகு பதினெட்டாம் நாள் தேர்தல் தீர்ப்பு வர இருக்கிறது.  இதற்கு இடையில் கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் நாங்கள் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு இன்னமும் தீர்வு கிடைக்கப் பெறவில்லை.  ஆனால், பாரதப் பிரதமர் அகில இந்திய வணிகர் மாநாட்டிலே வணிகர்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பேன் என்று உறுதி அளித்து இருக்கிறார்.  
 

அதே போன்று காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்படும். பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்  என்று சொல்லி இருக்கிறார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் இந்த மாநாடு என்பது எங்களுடைய தொடர் போராட்டங்களின் அடிப்படையில்  தொடர்ச்சியாக வரக்கூடிய அரசு எங்களை அழைத்துப் பேசி தீர்வு ஏற்படவில்லை என்று சொன்னால் தொடர் போராட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை முடிவெடுத்திருக்கிறது.  
 


அதேபோன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இங்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேலாக ஜிஎஸ்டி மூலம் வருவாய் ஏற்பட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல, இருக்கின்ற டோல்கேட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரிவிதிப்பு வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது.  அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் வாக்குறுதி அளித்ததுபோல சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.  சிறு சாலைகளில் கூட சுங்கச்சாவடி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்