![Money Laundering for getting job in forest department](http://image.nakkheeran.in/cdn/farfuture/jBRMQpNd5Eo0vkbrHtl22i89kGJwQH-UbSCz9WjuDtE/1703166312/sites/default/files/inline-images/Untitled-1_524.jpg)
ஈரோடு கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல்(27) மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவர்கள் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நானும் எனது நண்பரும் வேலை தேடிக் கொண்டிருந்தபோது ஈரோடு தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரும், சூளை மல்லிகை நகரைச் சேர்ந்த ஒருவரும் எங்களுக்கு வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நம்ப வைத்தனர்.
அதனை நம்பி நாங்கள் பல தவணைகளாக அவர்களிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 91 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தினர். நாங்கள் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் சரியான பதில் வரவில்லை. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி எனது தந்தை இறந்துவிட்டார். அதற்கு அடுத்த மாதம் அவர்கள் ஒரு லட்சம் பணம் தந்தனர். பின்னர் ஜூன் மாதம் அவர்கள் ரூ. 30,000 தந்தனர். அதன் பின்பு மீதி தொகையான ரூ. 2 லட்சத்து 61 ஆயிரம் பணம் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி மிரட்டல் விடுக்கின்றனர். எனது தாயின் நகையை அடமானம் வைத்து அவர்களிடம் பணத்தைக் கொடுத்துள்ளேன். பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.