ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ல் நடைபெற உள்ளது. இதற்காக தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவிபேட் இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படுகிறதா பழுது உள்ளதா என்பதை சரிபார்க்கும் வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெல் நிறுவனத்தில் இருந்து 8 பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பழுதை சரிபார்க்கும் பணியை தொடங்கினர். இந்த பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இதில் 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பணி நிறைவடைந்து வாக்குப்பதிவுகள் தயாராக இருந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை சோதிக்கும் வகையிலும் மாதிரி வாக்குப்பதிவு செய்து சரிபார்க்கும் பணி 24ந் தேதி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு சீல் திறக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. குலுக்கல் முறையில் 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரி ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன. அரசியல் கட்சியினர் வாக்குகளை பதிவு செய்து முறையாக அவை பதிவாகிறதா என்று சரி பார்த்தனர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், மாவட்ட டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.