Skip to main content

புறம்போக்கு இடத்தில் வீடு; இடிக்க வந்த அதிகாரிகளிடம் தீக்குளிப்போம் என மிரட்டல்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

mob threatened the officer who had built a house at Porambokku

 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்கின்றனர். இதற்கென்றே சில கும்பல்கள் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. கிரிவலப்பாதை செங்கம் சாலையில் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அருகில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு இடம் உள்ளது. இதனை முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தலைமையில் ஆக்கிரமித்து ப்ளாட் போட்டு விற்பனை செய்துள்ளார். அரசு கட்டடம் கட்டுவதற்காக எங்கெங்கு இடங்கள் உள்ளன என வருவாய்த் துறை தேடியபோது இந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். அந்த இடத்தை நேரில் சென்று பார்த்தபோது அங்கு சிலர் தகரம் போட்டு வீடுகள் கட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தருவதற்காகக் கட்டடம் கட்டலாம் என முடிவு செய்தனர்.

 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று பார்த்தபோது வெங்கடேசன், வினோத்குமார் ஆகிய இருவர் தலா ஆயிரம் சதுர அடியில் பில்லர் அமைத்து இரண்டு காங்கிரீட் வீடுகளை அங்கே கட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியான வருவாய்த் துறை அதிகாரிகள் அதனை அகற்ற வேண்டும் எனக் கேட்டபோது, முடியாது என அவர்கள் மறுத்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள மற்ற ஆக்கிரமிப்பு வீடுகளை, இடங்களை மீட்டு விட்டு பிறகு இங்கே வாருங்கள் என்றுள்ளனர். ஆக்கிரமித்த இடங்களை தங்கள் பெயரிலேயே பட்டா செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்துள்ளனர். அதற்கு வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, அந்த வீட்டை காலி செய்யவேண்டும் என நோட்டீஸ் தந்துள்ளனர். அதற்கு வீடு கட்டிய குடும்பத்தினர் காலி செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

 

வருவாய்த் துறை கோட்டாட்சியர் மந்தாகிணி பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் முடியாது என மறுத்துள்ளனர். பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்ட போலீஸாரை வைத்து அந்த குடும்பத்தினரை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தங்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு எங்களை காலி செய்ய முயன்றால் தீக்குளிப்போம் என மிரட்டியுள்ளனர். அவர்களை அந்த வீட்டிலிருந்து இழுத்து வெளியே விட்டும் அவர்கள் தரையில் புரண்டு அழுததால் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றினர். கஷ்டப்பட்டு பணம் சம்பாதிச்சி வீடு கட்டினால் இப்படி காலி செய்யுதே இந்த அரசாங்கம். இது நியாயமா என கோபமாகக் கேள்வி கேட்டனர்.

 

புறம்போக்கு இடத்தில் தகர ஷீட் போட்டு வீடு கட்டியிருந்ததை அதிகாரிங்க வந்து காலி செய்யச் சொன்னதும் ஒரே மாதத்தில் லட்சங்களில் செலவு செய்து வீட்டை கட்ட ஆரம்பிச்சிட்டு இப்ப வந்து, நாங்க ஏழை. அரசாங்கம் இடிக்குதுன்னு சொன்னா என்ன அர்த்தம் என கேள்வி அதிகாரிகள் எழுப்பினர். 35 லட்ச ரூபாய்ல கட்டின வீட்டை இப்படி இடிச்சா என்ன அர்த்தம் என அவர்களுக்காக பேசியவர்கள் கேள்வி கேட்டனர். 35 லட்சத்தில் வீடு கட்டுறவங்க எப்படி ஏழை எனக் கேள்வி கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். அவங்க தகுதியோடு இருந்தால் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என அதிகாரிகள் வாக்குறுதி தந்ததை அவர்கள் ஏற்கவில்லை. நீங்க 10 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் தருவீங்க. அங்க போய் எங்களால வாழ முடியாது என்றனர். அவர்கள் காலி செய்ய மறுத்ததால் அரசு வருவாய்த் துறை புறம்போக்கு இடத்தில் புதியதாக கட்டப்பட்டு வந்த இரண்டு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்