Skip to main content

தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை; பிடிபட்ட கொள்ளையர்கள் தி.மலை காவல் நிலையத்தில் விசாரணை

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

ATM robbery that rocked Tamil Nadu; Caught robbers

 

கடந்த 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் 70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு முக்கிய குற்றவாளிகள் இருவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜி கண்ணன், ''வழக்கில் ஒரு லீட் கிடைத்துள்ளது எனச் சொல்லி இருந்தேன். அப்படி கிடைத்த அறிவியல்பூர்வமான ஆதாரத்தை வைத்து நம்முடைய டீம் மூன்று இடத்தில் ஆபரேட் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்று கர்நாடகா கோலாரில் உள்ள கேஜிஎஃப். இன்னொன்று குஜராத்தில் ஒரு டீம் உள்ளார்கள். விசாரணை இன்னும் முடியவில்லை. திருட்டில் ஈடுபட்டவர்கள் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்ட சில பேருடைய மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விசாரணை விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும்'' எனக் கூறியிருந்தார்.

 

நேற்று திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் கும்பல் தலைவன் ஆரிப், ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து, ஹரியானாவிலிருந்து கொள்ளையர்களை விமானத்தில் தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர் எனத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையர்களை காவல்துறையினர் திருவண்ணாமலை அழைத்து வந்தனர். திருவண்ணாமலையில் நகர காவல்நிலையத்தில் வைத்து அவர்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் விசாரிப்பதன் மூலம் இவர்களுடன் இருந்தவர்களின் தகவல்களைப் பெற்று அவர்களை விரைவில் பிடிப்பதே காவல்துறையினரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

 

மேலும் இவர்கள் இல்லாமல் 8 பேரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர் குஜராத்தை சேர்ந்த 6 பேரையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் வைக்கப்பட்டுள்ள 8 பேரும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளனரா? அவர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் உண்டான தொடர்பு என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்