விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருவக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திருவக்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மாணவியின் தாய் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் விசாரித்தார்.
அப்போது அந்த மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தகத்துக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாச படங்களை பார்க்குமாறு பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் (38) வற்புறுத்தியதாகக் கூறினார். மேலும், அந்த ஆசிரியர் அரசு விழா நடப்பதாகக் கூறி விழுப்புரத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதியில் பாலியல் தொல்லை கொடுத்தாகவும், பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால்தான் தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து நேற்று (13-12-23) பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இந்த தகவல் பள்ளி முழுக்க பரவியதையடுத்து, தமிழ் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 5 பேர் பள்ளிக்கு வந்து ஒரே மாதிரியாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் உறவினர்கள், பள்ளியில் இருந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். அதன் பின்னர், அவரை வானூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, போலீசார் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் கடந்த ஆண்டுதான் திருவக்கரை பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவிகளை மகேஸ்வரன் ஆர்வமுடன் அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது, பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மகேஸ்வரனின் நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.