நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக சட்டமன்றத்தில் இருந்தால் அவர் கட்சியின் எம்.எல்.ஏ.ஒருவர் எப்படி பவ்வியமாகவும் அதே சமயத்தில் வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்றும், நன்றி என்றும் பேசுவாரோ அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கை கூப்பி வணங்கி விட்டு இப்படி பேசினார்.
"ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவித்தல், ஈரோடு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமயமாக்க அனுமதி வழங்கியது. ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கனி மார்க்கெட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க அனுமதி கொடுத்தால், பெரும்பள்ளம் ஓடையை அழகுபடுத்தி மேம்படுத்த 24 தடுப்பணைகள் அமைத்து மழை நீர் சேகரிப்பு செய்து இருபுறமும் நடை பாதைகள் அமைக்க ரூ 200 கோடி ஒதுக்கியது, இது போன்ற பல்வேறு பணிகளுக்கு அனுமதி கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உறுதுணையாக இருக்கும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் மகளிருக்கு என்று அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதைப்போல் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஈமச் சடங்கிற்காக முதலில் ரூ 250 வழங்கப்பட்டது. பின்னர் அதை அம்மா முதல்வராக இருந்தபோது ரூ.2,500 ஆக உயர்த்தி அறிவித்தார். இன்றைய விலைவாசி சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தத் தொகையை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சென்ற ஆண்டு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வகுப்பறை கட்டி கொடுப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி மூலம் தினசரி 220 டன் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேர்கிறது. காவிரி ஆற்றை மாசுபடுத்திய குப்பைகள் எல்லாம் ஆர்கானிக் மூலம் உரமாக்கி விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 15 டன் விலை இல்லாமல் உரமாக வழங்கப்படுகிறது. எனவே காவிரி ஆற்றை மாசுபாடு இருந்து காப்பாற்றிய முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற குடியிருப்பு வளாகத்தில் 20 ஆண்டு காலமாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது நான் அவை குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு எங்கள் குழு சார்பில் பலகோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகை மற்றும் ஓய்வூதிய பணப்பலன்கள் சுமார் 276 கோடி மதிப்பில் சுமார் ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு 16 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 485 கோடி செலவில் நடைபெற்றுவந்த ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார். அதேபோல் பெருந்துறை ரோடு காளிங்கராயன் இல்லத்திலிருந்து திண்டல் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க பணியும் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தென்னரசு எம்.எல்.ஏ. பேசினார்.
இதில் வார்த்தைக்கு வார்த்தை முதல்வரை வணங்குகிறேன், நன்றி, நன்றி என்றும் பேசினார். அதேபோல் கொங்கு மண்டல அமைச்சர்களான செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, வேலுமணிக்கும் தவறாமல் நன்றி சொல்லி விசுவாசத்தை காட்டினாராம் தென்னரசு.
சபையிலிருந்து வெளியே வந்த எம்.எல்.ஏ. தென்னரசுவிடம் "எம்.எல்.ஏ. சார் உங்க பேச்சு ஐஸ் மழை சார்... கூடிய சீக்கிரம் அடுத்த கோட்டா உண்டு'' என கூறினாராம் கொங்கு மண்டல சீனியர் அமைச்சர் ஒருவர்.