திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா நெருக்கடி நிலை காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. இந்த நிலையில், டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து 67-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதில், இதில், சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக விஜய் சேதுபதி வென்றார். சிறப்பு நடுவர் தேர்வில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'ஒத்த செருப்பு' திரைப்படம் வென்றது. சிறந்த ஒலி வடிவமைப்பாளருக்கான விருதை ஒத்த செருப்பு படத்திற்காக ரசூல் பூக்குட்டி வென்றார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை 'கேடி (எ) கருப்புதுரை' படத்தில் நடித்த நாக விஷால் வென்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை 'விஸ்வாசம்' படத்திற்காக இமான் வென்றார். சிறந்த நடிகர் விருதிற்கு நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டார். அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய விருது பெறும் தனுஷ், விஜயசேதுபதி, பார்த்திபன், டி.இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்! மென்மேலும் சிறப்புகளைப் பெறுக!’என்று பதிவிட்டுள்ளார்.