கரோனா காலகட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் சரியான முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை. அதற்கு முன்பு எடுத்த மதிப்பெண்களை மையமாக வைத்து தேர்ச்சி என்று பல்கலைகழகங்கள் அறிவித்திருந்தன. இதுகுறித்து கல்வியாளர்களிடம் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாகின. இதனால் ஆல் பாஸ் என்பது நிறுத்தப்பட்டது. தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் தலைமை அமைப்பான வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மறு தேர்விற்கு புதிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவ, மாணவிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
‘தேர்வு வைக்கட்டும், வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் தேர்வே நடத்தாமல் ஆல் பாஸ் என்றார்கள். அப்போது நாங்கள் கட்டிய தேர்வு கட்டணம் என்னவானது? இப்போது தேர்வு அறிவிக்கிறார்கள். இதற்கும் தேர்வு கட்டணம் கட்டச்சொல்வது எதற்காக? முன்பு நாங்கள் கட்டிய தேர்வு கட்டணம் என்னவானது?’ போன்ற கேள்விகள் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே எழுந்துள்ளது. இதற்கு கல்லூரி நிர்வாகங்கள், பல்கலைக்கழக நிர்வாகங்கள் பதிலளிக்கவில்லை.
இதனைக் கண்டித்து திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், பிப்ரவரி 13ஆம் தேதி காலை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் உட்பட சில மாணவ அமைப்புகள் முன்னெடுத்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.