திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே கடந்த 8ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கலைஞரின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மெரினாவில் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினம் என்பதால் கலைஞர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. காலை முதலே பொதுமக்கள் உள்ளூர், வெளியூர்களிலிருந்து தங்கள் குடும்பத்தினருடன் கலைஞர் சமாதிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், கலைஞரின் சமாதிக்கு அவருடைய மகன் மு.க.முத்து அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று வந்தார். உடல்நலம் குன்றியிருந்ததால் சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். கலைஞரின் சமாதியில் மு.க.முத்து மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சிறிது நேரம் கலைஞரின் உருவப்படத்தை பார்த்தவாறு கண் கலங்கியப்படி நின்றார். சோகம் தொற்றிக்கொண்ட நிலையில், அவரை அறியாமலேயே மு.க.முத்து கதறி அழுதார். இது அருகே நின்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.