நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26. 8.2023) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என். நேரு உள்ளிட்ட பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், “தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்க உடனடி முயற்சிகள் தேவை. அதனால் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை மார்ச் 16 ஆம் தேதி முதல் அமல்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கிறது. அதனால் இந்த திட்டத்தை தாயுள்ளத்தோடு அனைவரும் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னேற்றம் இல்லை என்று அறிக்கைகள் சொல்கிறது.
பள்ளிக் கல்வித்துறை தேர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. அடுத்தாண்டிற்கு மாற்றியாக வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னால் நிலுவையில் இருக்கும் சாலைப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.