ஈரோட்டின் ஒரு பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட கனி ராவுத்தர் குளம் என்ற பெரியகுளம் உள்ளது. ஆரம்பத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் இருந்த இக்குளத்தை பலர் ஆக்கிரமித்ததால் தற்போது 14 ஏக்கராக சுருங்கியது. இந்த குளத்தின் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அனுமதியற்ற கட்டடங்களை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை எந்த ஒரு கட்டிடத்தையும் இடிக்க ஈரோடு மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை ஏற்கனவே பொதுமக்களால் இக்குளம் தூர்வாரப்பட்டது. நீதிமன்ற உத்திரவுப்படி குளத்திற்கு ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வார டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அதற்கும் எதுவும் செய்யவில்லை. மாறாக குளத்தையும் அதன் நீர் வழித் தடத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியை பாதுகாப்பதற்கு பதிலாக குளத்தின் ஒரு பகுதியை மூடி நடு குளத்தில் ரோடு அமைக்க முயற்சி செய்தது. இது ஈரோட்டில் உள்ள சமூக ஆர்வலர்களை கொதிக்க வைத்தது.
இந்நிலையில் கனிராவுத்தர் குளத்தின் நீர் நிலைகளில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு மாநகராட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளையும் கடைகளையும் பலர் கட்டியுள்ளனர். எனவே கனிராவுத்தர் குளத்தை மூடக்கூடாது, அனுமதியற்ற கட்டிடத்தை இடிக்க வேண்டும். கனி ராவுத்தர் குளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'நீரோடை' என்ற அமைப்பு தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டோரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். குளத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அரசு நிர்வாகமும், காவல்துறையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்கள் போராட்டக்காரர்கள்.