கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,574 பேருக்கும், தமிழகத்தில் 911 பேருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில் கரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அவர்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழிகளிலும், கரோனா ஆய்வு நடத்தும் சில இடங்களிலும் கரோனா அச்சத்தின் காரணமாகவும், தவறான புரிதல் காரணமாகவும் தாக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.