தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் அசோக் நகர், தியாகராய நகர், கீழ்பாக்கம், வேப்பேரி பகுதிகளிலும், அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி பாலிடெக்னிக் மற்றும் பன்னாட்டு பள்ளி என 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “எனது நேர்முக உதவியாளரிடம் வருமான வரித்துறையினர் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு அச்சுறுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பினர். ஓட்டுநரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். எனது மனைவி, மகன்களிடம் வருமான வரித்துறையினர் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பினர். வருமான வரித்துறையினர் மேல் கோபம் வரவில்லை. ஏன் தெரியுமா, இவர்கள் அம்புதான். ஆனால் அம்பை எய்தவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். என் பெயரில் நேரடியாக 48.33 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. எந்த அறக்கட்டளையிலும் நான் பொறுப்பில் இல்லை.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு உணவுத்துறை அமைச்சராக நான் சிறப்பாக பணியாற்றினேன். எனக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான் வெளிநாட்டுக்காரன் இல்லை, இந்த மண்ணுக்கு சொந்தக்காரன். அடிப்படையில் விவசாயியின் வீட்டு பிள்ளை என்பது அத்தனை பேருக்கும் தெரியும். வருமான வரித்துறையினர் சோதனைக்கு நாங்கள் யாரும் அஞ்ச மாட்டோம். எங்களை பொறுத்தவரை நாங்கள் சட்டப்படி நடந்துகொள்வோம். எங்களை முடக்குவதற்காகவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எனக்கு தொடர்புடைய இடங்களில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை. ஏற்கனவே 2 நாள் என் வீட்டில் ரெய்டு நடத்தியதால் 2 நாட்கள் என் பணிகளை செய்ய முடியவில்லை.
பாஜக கட்சியில் வருமான வரித்துறையும் ஒரு அணியாக மாறிவிட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல பாஜகவில் ஒரு அணியாக வருமான வரித்துறை உள்ளது. எங்களை முடக்குவதற்காகவே இந்த சோதனை நடைபெற்றது. எனக்கும் காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பொறுத்தவரை நான் நேர்மையானவனாக, எனது மனசாட்சிக்கு பயந்தவனாக எப்போதும் கட்டுப்பட்டு இருக்கிறேன்” என தெரிவித்தார்.