கன்னியாகுமரியில் சாலைப்பணிகள் தரமற்ற முறையில் இருப்பதை பொதுமக்கள் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில் தரமில்லாத சாலைகளை அமைத்த ஒப்பந்தரர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் சாலையில் நிற்கவைத்து விசாரித்து எச்சரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை செல்லும் சாலை குண்டும் குழியுமாக தரமற்று கிடந்த நிலையில் மக்களின் நெடுநாள் கோரிக்கைக்கு பின் சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் போடப்பட்ட அந்த சாலை தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் அந்த தார் சாலையை கையில் பாயை போல சுட்டி எடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இதனை சமூக வலைத்தளத்தின் வாயிலாக பார்த்த தமிழக தொழிநுட்ப தகவல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது சாலையை போட ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். ''எத்தனை நாள் இந்த வேலையை பண்ணுவீங்க... சாலையை நொண்டி பார்த்தால் கரெக்டா இருக்குமா... இல்லையென்றால் விஜிலன்ஸ்கிட்டத்தான் கொடுப்பேன்'' என்று ஒப்பந்ததாரர்களை எச்சரித்தார். அமைச்சர் எச்சரிப்பதை வீடியோ எடுத்த சிலர் இந்த காட்சிகளை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.