Skip to main content

“அண்ணனாக, தம்பியாக, மகனாக, பேரனாக எப்போதும் காத்திருக்கிறேன்” - அமைச்சர் உதயநிதி

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

minister udhayanithi stalin talk in karur

 

“நமது மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல. அதற்காகவே இந்த மாதிரி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகிறது” என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு ரூபாய் 267.43 கோடி மதிப்பில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழா, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு 267.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக ஏற்பாடு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான். தமிழகத்தில் முன்னோடி மாவட்டம் கரூர். மேடையில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு நன்றி. கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சிறப்பு திட்டமாக 50 திட்டங்கள் செயல்படுத்தி மற்ற மாவட்டங்களை பொறாமை பட வைத்து, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி வருபவர் நமது அமைச்சர் செந்தில் பாலாஜி. தொழில் நகரமான கரூர் டெக்ஸ்டைல், பேருந்து கட்டுமானம், கொசு வலை உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக உள்ளது.

 

minister udhayanithi stalin talk in karur

 

திமுகவிற்கு வாக்களிக்காத மக்களும் பாராட்டும் வகையில் செயல்படுவோம் என்று கூறியதை போலவே முதல்வர் செயலாற்றி வருகிறார். முத்தமிழ் அறிஞர் எனது தாத்தா கலைஞர் முதன்முதலாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் என்னை போட்டியிட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற தேர்தலின்போது என்னிடம் அன்பாக கேட்டுக் கொண்டார். திமுக அரசு கொண்டு வந்துள்ள கட்டணமில்லா பேருந்து பற்றி நமது பெண்கள், ஸ்டாலின் பஸ் என்று கூறும் அளவுக்கு சிறப்பான திட்டமாக அது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாறியுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட்டவர் நம் முதல்வர். விவசாயிகளுக்கு 1,50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.  காலை சிற்றுண்டி மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். முதல்வரின் 2 ஆண்டுகால மக்கள் நல திட்டங்களை பட்டியலிட நேரம் பத்தாது. 20 மாதங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம். தேர்தலுக்காக அல்ல. அதற்காகவே இந்த மாதிரியான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. என்னுடைய துறையான மகளிர் சுய உதவிக் குழு மூலம் கரூர் மாவட்டத்தில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பாரம்பரிய தின்பண்டங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. அண்ணனாக, தம்பியாக, மகனாக, பேரனாக எந்த நேரமும் உங்களுக்காக பணியாற்ற சேவை புரிய இந்த உதயநிதி ஸ்டாலின் காத்திருக்கிறேன்." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்