திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பாமணி உர ஆலையை உடனடியாக இயக்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அக் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு கூட்டம் இன்று நடந்தது. மாதர் சங்க மாநில நிர்வாகழு உறுப்பினர் ஆர்.அம்புஜம், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் பி.முருகேசு தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் சிவபுண்ணியம் கோ.பழனிச்சாமி, கே. உலகநாதன் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை.....
மன்னார்குடி அருகேயுள்ள பாமணியில் 1971ம் ஆண்டு முதல் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது, அதில் விவசாய விளை பொருட்களுக்கு பயன்படும் பாமணி 17 : 17 : 17 என்ற தரமான உரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வநியோகம் செய்யப்பட்டது, இந்த தொழிற்சாலையில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் ஆகிய 4 மூலப்பொருள்களைக் கொண்டு, ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு பொருள்களைக் கலந்தும் சத்தான உரம் தயாரிக்கப்பட்டது, கடந்த 2013-14 -ஆம் ஆண்டு 15 ஆயிரம் டன்னும், 2017-18 -ஆம் ஆண்டு 8 ஆயிரம் டன்னும் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தொழிற்சாலையில் 185 நிரந்தர ஊழியர்களும், நூற்றுக்கணக்கான தற்காலிக ஊழியர்களும் பணி செய்த நிலையில் திடீரென மாநில அரசு படிப்படியாக ஆட்குறைப்பு செய்ததால் தற்போது 7 நிரந்தரப் பணியாளர்களும் 24 தற்காலிக ஊழியர்கள் மட்டுமே வேலைபார்த்து வருகிறார்கள். கடந்த 2015-16 -ஆம் ஆண்டு ரூ. 40 லட்சம் செலவில் உரத்தை மூட்டையாக்க, வாங்கப்பட்ட இயந்திரம் பயன்படுத்தப்படாமல் உள்ளது, இதனால் பாமணி உரத் தொழிற்சாலையை மூடப்பட்டு விடும் என்ற அச்சம், விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது, மேலும் பாமணி தொழிற்சாலையை மூடிவிட்டு இதனை திண்டுக்கல் மாவட்டத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது, இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிற்சாலையை தொடர்ந்து இயங்குவதற்கும், உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கும் பழுதடைந்துள்ள கட்டிடத்தையும், இயந்திரத்தையும் புதுப்பித்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்,
அதே போல் கடந்த ஏழாண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்துள்ள விவசாயிகள் அனைவரும் நடப்பாண்டு சம்பா சாகுபடியை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர், எனவே விவசாயிகள் அனவைருக்கும் எந்தவிதமான நிபந்தனையுமின்றி பயிர்க்கடன் காலத்தில் வழங்கிட வேண்டும்,
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக சொல்லப்படும்பாசன, வடிகாள், ஆறுகளின் சிரமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்தி வைத்து காவிரி நீரை கடைமடை வரை அனுப்பி வைத்திட வேண்டும்,
நீர் நிலைகளில் இந்த நீரை நிரப்பிட தனி முயற்சி எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.