மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று பேசினார். அந்த இந்து என்பவர் காந்தியடிகளை கொன்ற நாதூராம் கோட்சே என்று விளக்கமும் கொடுத்தார்.
இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் கூறியதுக்கு பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசனை கண்டித்தனர். மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கப்பட்ட அங்கிகாரத்தையும் தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் இன்று குமரி மாவட்ட பாஜக, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நாகா்கோவில் வடசேரி சந்திப்பில் கமல்ஹாசனின் கொடும்பாவியை எரித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்று கமல்ஹாசன் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.