வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த முதல் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை மதுரையில் நடந்தது.
அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “பருவ காலங்களில் ஏற்படும் பேரிடர் தொடர்மழை, பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட நேரங்களில் மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமலோ, கவனக்குறைவாலோ இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதை ஒரு முடிவாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குறும்படம் மற்றும் விளம்பரங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறோம்.
மாணவர்கள் மூலம் நாடகங்கள், மீட்புக் குழுவினர் மூலம் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தமிழரும் தன் குடும்பத்தை, உறவுகளை மட்டுமல்லாது தன்னையும் தற்காத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு அனைத்துத்துறை அதிகாரிகளாலும் கொடுக்கப்படுகிறது. திருச்சி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழர்கள் பேரிடரை எதிர்கொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வோடு இருப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. இதை மக்களிடத்தில் கொண்டு செல்வது ஊடகங்களின் பொறுப்பு.” என்றார்.