Skip to main content

"வரும் தலைமுறையினர் இதை சரி செய்வார்கள்" விவசாயிகள் மத்தியில் நடிகர் கார்த்தி பேச்சு...

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

ஈரோடு மாவட்டம்  கொடுமுடி அருகே உள்ளது கிளாம்பாடி என்ற ஊர். இதன் அருகே உள்ள ஒரு கிராமம்தான் நடிகர் சிவக்குமார் அவர்களின் மகனும், நடிகருமான கார்த்தியின் மாமனார் ஊர். அதாவது அவரின் மனைவியின் சொந்த ஊர். பொங்கலை முன்னிட்டு அந்த கிராமத்திற்கு வந்திருந்த நடிகர் கார்த்தி, அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில்  கொன்டாடப்பட்ட  காளிங்கராயன் தின நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 

karthi participated in kalingarayan day function

 

 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பவானி ஆற்று நீரை தடுத்து விவசாயத்திற்காக வாய்க்கால் வெட்டியவர்தான் காளிங்கராயன். இதனால் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. அந்த காலிங்கராயனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நடிகர் கார்த்தி, ஊர் பொதுமக்களுடன் இணைந்து காளிங்கராயன்  வாய்காலில் முளைப்பாரி விட்டு  மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசிய கார்த்தி,  "ஒரு தனி மனிதன், அதாவது காளிங்கராயன் அவர்கள் தனக்கென இல்லாமல் ஊர் நலனுக்காக, ஊர் மக்களுக்காக தன் கையில் இருக்கிற காசை செலவழித்து காளிங்கராயன் வாய்க்கால் வர காரணமாக இருந்துள்ளார். சில நூறு  வருடங்களுக்கு முன்பு நன்றாக இருந்த காலிங்கராயன் வாய்க்காலில், கடந்த 40 வருடங்களாக விஷ கழிவுகளை கலக்க வைத்து  நாம் சீரழித்து விட்டோம். அதை சீர் செய்ய வேண்டியது நமது கடமை. சீர் செய்யவும் முடியும். காளிங்கராயன் நீர்  எதனால் கெட்டுப்போனது என மாசுபடுத்தியவர்களுக்கு தெரியும். தொழிற்சாலை சாய கழிவுகள் காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. இதன் மூலம்  நாம் பணம்  சம்பாதித்தாலும், ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

அடுத்தவர் ஆரோக்கியத்தை பாழ்படுத்துவது கொடுமை. வரும் தலைமுறையினர் இதை சரி செய்வார்கள். இன்றைய காலத்தில் விவசாயிகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. இன்றைய தலைமுறையினர் எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விடக்கூடாது. மாணவர்கள்,கண்ணுக்கு எதிரில் குப்பை தெரிந்தால் அதை எடுத்து போட வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில், பொருட்களை  கல்லூரி பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை சுத்தம் செய்யலாம். முதலில் நம் வீடு சுத்தமாக இருந்தாலே நம் நாடு சுத்தமாக மாறிவிடும்" என கூறினார். முன்பாக காலிங்கராயன் வாய்க்காலை கழிவு நீர் கலக்காமல் மீட்டு எடுக்க வேண்டும் என உறுதி மொழியை நடிகர் கார்த்தி மற்றும் பொது மக்கள்  எடுத்துக்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்