தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் புதிதாக மூன்று நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் சுரங்கம் அமைக்கக்கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில் ஒருபோதும் காவிரி டெல்டா பகுதியில் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என உறுதியளித்திருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இத்திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து இதனை வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, சுரங்கம் அமைக்கும் திட்டம் முதல்வரின் தொடர் அழுத்தத்தால் கைவிடப்பட்டுள்ளது என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘மத்திய அமைச்சரின் அந்த பதிவில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை ரத்து செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று கேட்டனர். அதற்கு பக்கத்தில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “சுரங்கம் அமைக்கும் அறிவிப்பு வந்த உடனேயே முதல்வர் ஸ்டாலின், இதனை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தார். அதனால்தான் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது முதல்வரின் தொடர் அழுத்தத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி. நாங்களும் அதனை வரவேற்கிறோம்.
ஆனால் அதே சமயத்தில் முதல்வர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் எனக்கு வருத்தமளித்தாலும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் விவசாயிகளின் மீதும் இந்தளவுக்காவது ஒரு அக்கறை நம்முடைய மத்திய அரசுக்கு வந்திருப்பதில் திருப்தியளிக்கிறது” என்றார்.