கோவையில் நிறைவேற்றப்பட உள்ள 24 மணி நேர சிறுவானி குடிநீர் விநியோகம் குறித்து தவறான விமர்சனங்கள் பரப்பப்படுவதாகவும், பூச்சாண்டி காட்டி தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
3.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட கோவை காந்தி பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.தொடர்ந்து அங்கு புணரமைக்கப்பட்டுள்ள நீச்சள் குளம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெள்ளி நீரூற்று, மூலிகை தோட்டம், யோகா மையம், வயதானவர்கள் ஓய்வு பெறும் இடம், மற்றும் திறந்த நிலை அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,5.25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு நூற்றாண்டுகள் கடந்த இந்த பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பூங்கா புணரமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
![minister sp velumani interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/QhfmmyXasoi8QimF_hl8fm4lqsHTExo9XkkOqH5jCI0/1568616217/sites/default/files/inline-images/asasasaasaasasa_1.jpg)
தொண்டாமுத்தூர் தொகுதியில் சிட்கோ அமைக்கப்பட்டு வருவதாகவும், கோவையில் அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு பாலப்பணிகள் நிறைவடைந்தும் சில பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லாத வகையில் பில்லூர் 3 வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் உக்கடம் குளத்தில் படகு சவாரி துவங்கப்பட உள்ளதாகவும் கூறினார். கோவையில் விரைவில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் சூயஸ் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் நிலையில் அது குறித்து பல விமர்சனங்கள் வருவதாக சுட்டிக்கட்டிய அமைச்சர் வேலுமணி, கடந்த 2008 ம் ஆண்டில் தீர்மானம் போட்டு திமுக அதனை கொண்டுவர முயற்சித்ததாகவும் அவர்களால் முடியாத நிலையில் தற்போது நாம் நிறைவேற்றியுள்ளதால் அதனை விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், தவறான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதாகவும் சிறுவானி அடகு வைக்கப்படவில்லை பராமரிப்பு மட்டுமே செய்ய மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தவறான விமர்சனங்கள் மூலம் பூச்சாண்டி காட்டி தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும், தான் பதவியில் உள்ளவரை என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அத்தனையும் கொண்டுவருவேன் எனவும் உறுதியளித்தார். கோவை விமானநிலைய விரிவாக்கம் பணி நிறைவடைய உள்ளது எனவும் கோவைக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள சூழலில் மேலும் தேவையான அனைத்தும் செய்து தருவோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் புணரமைக்கப்பட்டுள்ள பூங்காவை அனைவரும் ஒன்றிணைந்து நன்றாக பராமரிக்க வேண்டும் எனவும் பராமரிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.