Skip to main content

வருத்தம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
Minister Shekharbabu expressed regret

பாஜகவில் இயங்கி வரும் நடிகை நமீதா மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நமீதா நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்று இருந்ததாகவும் அப்பொழுது மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதோடு நீங்கள் இந்துதான் என்பதற்கான சான்றிதழை வழங்கினால் தான் உள்ளே அனுமதிப்போம் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நமீதாவும் அவருடைய கணவரும் வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை நமீதா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இந்து கோவில்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன். அப்படி இருக்கும்பொழுது மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மட்டும் என்னை செல்ல விடாமல் எப்படி தடுக்கலாம்' என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில், 'நமீதா கோயிலுக்கு வந்த பொழுது கோவில் கண்காணிப்பாளர் வெண்மணி பணியிலிருந்து உள்ளார். மேலதிகாரிகளை கேட்டுவிட்டு கோவிலுக்குள் அனுமதிக்கிறோம் சற்று நேரம் ஓய்வாக நில்லுங்கள் என்று சொன்னதாகவும், அதற்குள் அவருடைய கணவரும், நமீதாவும் 'தாங்கள் இந்துக்கள் தான். திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கு சென்று வந்துள்ளோம். அப்படி இருக்க எப்படி காத்திருந்துதான் செல்ல வேண்டும் என கூறலாம்' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் கண்காணிப்பாளர் இணை ஆணையராக உள்ள கிருஷ்ணன் என்பவரிடம் கேட்டு இருவரையும் கோவிலுக்குள் சென்று வழிபட வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. நமீதாவிடம் காட்டமாக நடந்து கொள்ளவில்லை. கோவில் விதிப்படிதான் பேசினோம்' என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

nn

இந்நிலையில் கோவில் நடவடிக்கையால் நமீதா வருத்தம் அடைந்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் கோவிலில் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நமீதா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''இதுபோன்ற ஒரு பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்பதால் அப்படி ஒரு சம்பவம் நேற்று நடந்திருக்கிறது. உண்மையிலேயே இந்த சம்பவம் குறித்து நமீதா பதிவை நான் பார்த்தேன். என்னையும் அந்த பதிவில் இணைத்துதான் இப்படி நடந்தது என்று முறையிட்டு இருந்தார். அவர் வருத்தப்பட வேண்டாம். அப்படி அவர் பெரிய அளவில் வருத்தப்படுவதாக இருந்தால் நாங்கள் எங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து கொள்கிறோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்