மயிலாடுதுறை மாவட்டத்தில் அறைகுறையாக செய்யப்பட்டிருந்த பள்ளி கட்டிட சீரமைப்பு பணிகளை கண்ட அமைச்சர் சேகர்பாபு கோபமடைந்து அங்கிருந்த அதிகாரிகளை கடுஞ்சொற்களால் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கருவாழகரை காமாட்சி அம்மன் கோயிலில், சீர்காழி சட்டநாதர் கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், கீழ பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆய்வு மற்றும் தரிசனம் செய்தார். கருவாழகரை கிராமத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் சாமிதரிசனம் மேற்கொண்டார்.
பின்னர், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சொத்துக்கள் உள்ளிட்ட விபரங்களை கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தவர், கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள, இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சுவேதாரண்யேஸ்வரர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி கட்டிட சீரமைப்பு பணிகள் காலதாமதமாகவும், சரிவர செய்யப்படாததையும் கண்டு கோபமடைந்தவர் அதிகாரிகளிடம் ஒரு ஆண்டாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கடும் சொல்லால் சாடினார். அப்போது அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய திமுக மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகனிடமும் அவர்களுக்கு சப்போர்ட் செய்யாதீங்க, நீங்க இங்க இருந்துக்கிட்டு என்ன செய்யுறீங்க என கடிந்து கொண்டார்.