ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சமபல வெற்றி பெற்று இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டது அதிமுக. குறிப்பாக மேற்கு மாவட்டமான கொங்கு மண்டலத்தில் திமுகவை பின்னுக்குத் தள்ளி யூனியன் கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் அதிக இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
இந்த உற்சாகத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அடுத்தகட்டமாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தொடங்கி விட்டார்கள். தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி, சேலை மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் என பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இன்று (05.01.2020) கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அத்துடன் பொங்கல் தொகுப்போடு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கொடுத்தார்.
பொங்கல் வரும் பின்னே ஆயிரம் ரூபாய் வரும் முன்னே என அ.தி.மு.க.நிர்வாகிகள் பொது மக்களிடம் உற்சாகமாக கூறினார்கள். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அம்மாவின் ஆட்சி சீரும் சிறப்புமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம் எனக் கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மைக்கை நீட்டி, உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றி இல்லையே என்றும், நெல்லைக்கண்ணன் கைது என்றும் பேசத் தொடங்க திடீரென திரும்பிய அமைச்சர் செங்கோட்டையன் அடப்போங்கப்பா என்று சிரித்தவாறு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.