இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் (மார்ச் 10-11) மாநிலக்குழுக்கூட்டம் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் உள்பட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாணவிகள் படுகொலைகள் மற்றும் மாணவிகள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில்,
நாடு முழுவதும் உலகப் பெண்கள் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றும் வரும் சூழலில் சென்னை மீனாட்சி பொறியியல் கல்லுhரியில் மாணவி ஆயிஷா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. காதலித்து ஏமாற்றியதால் படுகொலை, காதலிக்க மறுத்ததால் படுகொலை என்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. காதலிப்பதற்கும், காதலிக்க மறுப்பதற்கும், யாரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது என்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பட்டப்பகலில் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீப காலமாக தமிழகம் முழுவதும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் போன்றவைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டம் செல்லியம்பட்டி உயர்நிலைப்பள்ளியில் பல மாணவிகள் அப்பள்ளி தலைமை ஆசிரியரால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சித்ராதேவி என்ற மாணவி காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு கொடூரமான கொலை நடைபெற்றுள்ளது. பல பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வருவதும் அதிகரித்து வருகிறது. பல மாணவிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதும் மர்மமான மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.
பல வழக்குகளில் பாதிக்கப்படும் மாணவிகள் புகார்கள் கொடுத்தாலும் உரிய நேரத்தில் போதிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியப்படுத்துவதாலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிக்கின்றன. உரிய நேரத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர் இளம் பருவத்தினர் மத்தியில் எற்படும் மனநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சிகளை கொடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுவெளியில் (இரயில் நிலையம், பேருந்து நிலையம்) போன்றவைகளில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவது இன்றைய தேவையாகும். மாநில அரசு, காவல்துறையும், கல்வித்துறையும் கூடுதல் பொறுப்பெடுத்து குற்றங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.