Skip to main content

‘தீட்சிதர்களின் பக்கம்தான் சட்ட மீறல் இருக்கிறது’ - அமைச்சர் சேகர்பாபு

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

minister sekar babu says chidambaram natarajar temple issue

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் நின்று வழிபடக் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர். அதன் பெயரில் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த 24 ஆம் தேதி பதாகையை அகற்றச் சென்றபோது தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது.

 

மேலும் பதாகையை அகற்றிய பிறகும் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வந்தனர். இந்த நிலையில் 27 ஆம் தேதி மாலை சிவபக்தர் ஜெமினி ராதா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டவர்கள் கனகசபை வாயிலில் அமர்ந்து கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பாரதீய ஜனதா கட்சியினர், சங்பரிவார் அமைப்புகள் அங்கு கூட்டமாக வந்து இவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கோவிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்றனர். ஆனால், தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டனர். இதனையடுத்து தீட்சிதர்கள் அனைவரும் கனகசபையைப் பூட்டிவிட்டு கீழே வந்து காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூறி தீட்சிதர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் கடும் முயற்சிக்கு பின்னர் பக்தர்கள் கனகசபை மீது எறி வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இச்சம்பவம் குறித்துப் பேசுகையில், “திருக்கோவில்களின் சொத்துகள் சூறையாடப்படுவதையும், திருக்கோவில்களுக்கு வர வேண்டிய வருவாய் மற்றும் வருமானங்களை முறையாகப் பராமரிப்பதிலும், வசூலிப்பதிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. அத்துமீறல் என்பது இந்து சமய அறநிலையத்துறையில் இல்லை. மேலும் இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரையில் சட்டத்தின்படி தான் அனைத்து நடவடிக்கையையும் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். துறையில் எந்த சட்ட மீறலும் இல்லை. தீட்சிதர்களை சார்ந்து தான் சட்ட மீறல் இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்