திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக நுட்புனர் நிலை-2க்கு (லேப் டெக்னீசியன்) விண்ணப்பம் செய்திருந்த ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த 23 பேருக்கு தற்காலிக பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. நியமன ஆணையை பெற்ற 23 பேர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்தித்து அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.
அதன் பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நிரந்தர பணியோ, தற்காலிக பணியோ படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படாததால் வேலையில்லா திண்டாட்டம் இருந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாடல் ஆட்சி அரசு பணி மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தற்காலிக பணிகளை ஒரு பைசா செலவின்றி வழங்கி வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை கல்லூரிக்கு வரும் பொது மக்களிடம் அன்பாக நடந்து பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் பணியாற்றுங்கள்" என்று கூறினார்.
நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் நடராஜன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவ குருசாமி தொண்டர் அணி துணை அமைப்பாளர் விவேகானந்தன் உள்பட கட்சி பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.