
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து குடிநீர், வருவாய், கூட்டுறவு, ஊரகம், மின்சாரம், சமூக நலம், கல்வித்துறை, அறநிலையத்துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சி துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் துறை சேர்ந்த அதிகாரிகளிடம் தொகுதி பணிகள் குறித்து அமைச்சர் சக்கரபாணி கேட்டறிந்தார். அப்போது, தொகுதியில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்கும் பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடு கேட்கும் பொதுமக்களிடம் ஜாதி, மதம் பார்க்காமலும் கட்சி பாகுபாடு பார்க்காமலும் வீடுகள் ஒதுக்கி கொடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்காக ரூ.1400கோடி மதிப்பீட்டில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் எந்த அளவு நடைபெறுகிறது என்று குடிநீர் வடிகால் அதிகாரியிடம் அமைச்சர் கேட்டபோது, காவேரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 90சதவிகிதம் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவு பெறும் என்று கூறிய அதிகாரிகளிடம் எந்தெந்த ஊர்களில் வாட்டர் டேங்க் கட்டப்பட்டு வரும் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகிறது என்று கேட்டபோது, அந்த பணிகளையும், சீக்கிரம் முடித்துவிடுவோம் என்றனர்.

அதற்கு அமைச்சரோ ஒட்டு மொத்தப் பணிகள் எல்லாம் போர்க்கால அடிப்படையில் ஏப்ரல் இறுதிக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு நம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக முதல்வர் மே மாதம் வர இருக்கிறார். அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதுபோல் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து எந்த அளவுக்கு பணிகள் முடிந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இதில் அதிகாரிகள் காலதாமதம் செய்தால் நானே ஒவ்வொரு ஊராட்சிப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து அதன் பேரில் நடவடிக்கையும் எடுக்கப்படும். அதனால் அதிகாரிகள் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து குறைகள் நிறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அத்துடன் அனைத்து கட்டிடங்களையும் பெயிண்டிங் அடித்து இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அதுபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள சில வார்டுகளில் கழிவுநீர் ஓடைகள் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். அது எந்த பகுதி என்று அதிகாரிகள் அந்த பகுதி கவுன்சிலர்களிடம் கேட்டு அதை போட்டுக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அறநிலையத்துறை அதிகாரியிடமும் தொகுதியில் எந்தெந்த கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் அமைச்சர் கேட்டறிந்தார். இப்படி ஆய்வு கூட்டத்திற்கு வந்த அனைத்து துறை அதிகாரிகளிடமும் தங்கள் துறைகளின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்.