
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் என்ற பெயரில் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது எனக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்திலும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று தீவிர நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும். ஜூலை 11- ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் எனக்கு அழைப்பிதழ் வந்தது. எனவே, இந்த மனுவை அவசர வழக்காகப் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை அவசர வழக்காக நாளை (06/07/2022) விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.