Skip to main content

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன அமைச்சர் மூர்த்தி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Minister Murthy gave good news to jallikattu enthusiasts

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை ஆகும். இதன் ஒரு பகுதியாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி பொங்கல் நாளான 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாளான 16 ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முகூர்த்தக் கால் இன்று (08.01.2024) நடப்பட்டது. இந்த முகூர்த்தக் கால் நடும் விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23 அல்லது 24 ஆம் தேதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘மதுரை மாவட்டம் மேக்கிப்பட்டியில் உள்ள கீழக்கரை என்ற இடத்தில் ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்டமாக ஒரு மைதானம் உருவாக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார். அதன்படி சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.