தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திங்கட்கிழமை சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் நடைபெற்று வரும் அண்ணா குளம் தூர்வாரி சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அதன் பின்னர் ஞானப்பிரகாசர் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் உழவர் சந்தையில் காய்கறி மார்க்கெட் கட்டும் பணியை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிதம்பரம் நகராட்சியில் 33 திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறன. 5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறன. அதேபோல் ரூ.5 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. ரூ.140 கோடிக்கு சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் சிதம்பரம், அண்ணாமலை நகர் மற்றும் 10 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகராட்சிக்கு மட்டும் ரூ.214 கோடிக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரம் விரிவாக்கத்திற்காக 4 வழி புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புறவழிச்சாலை அமைத்து முடியும் போது புதிய பேருந்து நிலையம் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
சிதம்பரம் நகர பழைய பேருந்து நிலையமும் சீரமைக்கப்படவுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு தேவைகள், பணி சீரமைப்பு நடைபெற்று வருகிறது. தேவைக்கு அதிகமான பணியிடங்கள் சீரமைப்பும், தகுதிக்கேற்ற பணியிடங்கள் குறித்து சீரமைப்பு பணியும், தகுதி வாய்ந்த மருத்துவர்கள் நியமனமும் நடைபெற்று வருகிறது. அது இறுதி சான்றிதழ் வந்த பிறகு முழுமை பெற்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்படும். புதிய மருத்துவ வசதிகள் உருவாக்கப்படும். தற்போது ரூ.10 கோடிக்கு புதிய கட்டடங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 இடங்களில் சுமார் 560 விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு எந்த எந்த மண்ணில் எந்த பயிர் பயிரிடுவது, என்ன தேவை என வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. முதல்வர் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்ததன் பலனாக சிறுதானிய பயிர்களை ஊக்குவிக்கும் திட்டம் உருவானது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதை கற்றுக்கொள்ள வேண்டும். நெல், காய்கறி, பழங்கள் ஆகியவற்றை மதிப்புக் கூட்டி விற்கும் போது கூடுதல் லாபம் கிடைக்கும். அடுத்தகட்டமாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தும் போது விவசாயிகள் இரட்டிப்பு லாபம் அடைவார்கள். இதற்கான பயிற்சியை விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை வழங்கவுள்ளது" என்றார்.
அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், சிதம்பரம் நகரமன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன், வட்டாட்சியர் செல்வக்குமார், நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மூத்த நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ஜேம்ஸ் விஜயராகவன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், மணிகண்டன், அசோகன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.