புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள குளமங்கலம் என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குளமங்கலம் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சரியான சாலை வசதியில்லாத காரணத்தால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத சூழல் இருந்தது. இதனால், இந்தக் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், தங்களுடைய கிராமத்திற்கு நிரந்தரமாக சாலை அமைத்துத் தர வேண்டும் என்று ஊர்மக்கள் ஒன்று கூடி அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், அருகில் இருந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனிடம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்.
அதன்பிறகு, கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கிராமப் பதிவேடுகளைக் கொண்டுவரச் செய்து ஆய்வு செய்த போது, சம்பந்தப்பட்ட பகுதிக்கு நிலவழிப்பாதை இருப்பதாக வருவாய் கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த வரைபடத்துடன் சர்வேயர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற கோட்டாட்சியர் முருகேசன், அந்தப் பகுதியில் நிலம் வைத்துள்ள பட்டாதாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பல வருடங்களாக நில உரிமையாளர்களாக இருந்த விவசாயிகள், சாலை அமைப்பதற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒன்றாக சேர்ந்து சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில், 5 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சாலை அமைக்கும் பணி அன்று மாலை வரை நடந்தது. மேலும், அமைச்சரின் உத்தரவின் பேரில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த கோட்டாட்சியர் முருகேசன், கடைசி வரை அங்கேயே இருந்துள்ளார். முதல் நாளில் தொடங்கிய பணிகள் இரண்டாம் நாள் மாலை வரை நீடித்த நிலையில், முழுமையாக சாலை பணிகள் முடிந்த பிறகுதான் அவர் அங்கிருந்து சென்றார். இதனால், நெகிழ்ந்து போன கிராம மக்கள் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்கள்.
பல வருடங்களாக பாதை இல்லாமல் தவித்த மக்களுக்கு, ஒரே நாளில் தீர்வு கண்ட அமைச்சர் மெய்யநாதனுக்கும், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் தங்களின் பாரட்டுகளைத் தெரிவித்தனர்.