![Minister ma Subramanian saidsaid to stop drawing blood art](http://image.nakkheeran.in/cdn/farfuture/9s0kpTRRl2dekAxi8RyLYfIMZoGGfwHeAtjo5YqVNUU/1672225330/sites/default/files/inline-images/996_132.jpg)
மனிதர்களின் ரத்தத்தைப் பயன்படுத்தி ப்ளட் ஆர்ட் வரைவதைக் கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா பரவல் சமயத்தில் ப்ளட் ஆர்ட் ஓவியம் வரைவது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் கூட ஒரு புதிய கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. ப்ளட் ஆர்ட் என்ற ஓவியத்தை ரத்தத்தால் உருவாக்கி காதலன், காதலிக்கு அனுப்புவது என்ற புதிய கலாச்சாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
ரத்தத்தில் ஓவியம் வரைவதை சிலர் தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ரத்த தானம் என்பது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் புனித கடமை. ஆனால் அந்த ரத்தத்தை எடுத்து படம் வரைவது சரியான ஒன்றல்ல. ரத்தத்தை மருத்துவர்கள் எடுக்கும்போது அதற்கான வழிமுறைகளைக் கையாளுகிறார்கள். எடுத்த ரத்தத்தைப் பாதுகாப்பார்கள். ஆனால் ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் முறையான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும். அப்படி எடுக்கப்பட்ட ரத்தம் திறந்த வெளியில் இருக்கும் போது ஒரு வேலை அது எச்ஐவியால் பாதிக்கப்பட்டவரின் இரத்தமாக இருந்தால், மற்றவருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படும்.
சென்னையில் இது போன்ற ப்ளட் ஆர்ட் நிறுவனம் செயல்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுக்கள் அங்கு சென்று அவர்கள் பயன்படுத்தும் ஊசிகள், வரைந்த ஓவியங்கள் அனைத்தும் பறிமுதல் செய்து, இத்துடன் இந்தத் தொழிலைக் கைவிடவேண்டும். இல்லை என்றால் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நானும், இப்போது சொல்லிக் கொள்கிறேன் ப்ளட் ஆர்ட் வருவதை நிறுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.