பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு ரூ. 1000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று (03.01.2023) முதல் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதனையொட்டி பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்களை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கோபாலபுரம் கான்ரான்ஸ்மித் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகச் சேமிப்புக் கிடங்கில் இன்று காலை 10.00 மணியளவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.சக்கரபாணி பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.