இராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமத்தில் வசிக்கும் குடுகுடுப்பைக்காரர் சமூகத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மல்லிப்பூ. இந்த தம்பதிக்கு 20 வயதில் பழனி என்ற மகனும், 14 வயதில் செல்வி என்ற மகளும் உள்ளனர்.
கூலித் தொழிலாளியான இவர்கள் சிறிய ஓலைக் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். குடும்பத்தைக் காப்பாற்ற மல்லிப்பூ தனது இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைக்க வீதி வீதியாகச் சென்று சுருக்குப் பை விற்பனை செய்துள்ளார். அந்த வருமானம் போதாததால், பிளாஸ்டிக் பொருட்களை தெருத்தெருவாக விற்பனை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் மல்லிப்பூ கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரால் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். இந்தச் சூழலில் குடும்ப வறுமை, சாப்பாட்டுக்கு வழியில்லாததால் மகன் பழனி பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுக் குடுகுடுப்பைத் தொழிலினைச் செய்துள்ளார். அதிலும் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த செல்வியும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு தனது தாயார் மேற்கொண்டு வந்த சுருக்குப்பை விற்பனை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீதி வீதியாகத் தலையில் சுமந்தவாறு நடந்து சென்று விற்பனை செய்துள்ளார். அதன் மூலமாக வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு அவர்களது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
இது குறித்த தகவல் சமூக நல ஆர்வலர்கள் மூலமாக அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் அச்சிறுமியின் வீட்டிற்கு நவம்பர் 7ஆம் தேதி நேரில் சென்று படுத்தப் படுக்கையாக உள்ள சிறுமியின் தாய்க்கு ஆறுதல் தெரிவித்தனர். சிறுமியின் பள்ளி மற்றும் கல்லூரி செலவு முழுவதையும் தானே ஏற்பதாக உறுதி அளித்த அமைச்சர், மல்லிப்பூவிற்கு உடனடியாக அரசின் சார்பில் இலவச வீடு கட்டித் தர ஆணையிட்டார். மேலும் அவருக்கு உடனடியாக முதியோர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டார்.
சிறுமியின் சகோதரர் பழனிக்கு தனியார் தொழிற்சாலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளை அழைத்த அமைச்சர், மாணவியை இன்றே பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சியர் பாண்டியன் அந்த மாணவியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்பில் மீண்டும் சேர்த்தார். அதன்படி மாணவி சீருடை உடுத்தி மகிழ்ச்சியோடு படிக்கத் துவங்கியுள்ளார்.