Skip to main content

“அந்த தட்டும் மணியும் என்ன அவ்வளவு வெயிட்டா...” - அமைச்சர் எ.வ. வேலு பேச்சு

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

nn

 

மதுரை மாவட்ட மாநகர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், ''சிவாஜி கணேசன் நாட்டிற்கு கதாநாயகனான வரலாறு என்னவென்றால் கலைஞர் எழுதிய வசனத்தால் தான் சிவாஜி கணேசன் கதாநாயகன் ஆனார். மந்திரிகுமாரியில் கலைஞர் கதை வசனம் எழுதவில்லை என்றால் மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக ஆகியிருக்க முடியாது. கடைசி வரை கோலை வைத்துக்கொண்டு காவல் பணிதான் பார்த்துக் கொண்டிருக்க முடியும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஒட்டுமொத்த கொள்கையும் வைத்து ஆட்சி நடத்துவதே திராவிட மாடல். காவி அணிந்தவர்கள் எல்லாம் எங்களுடைய விரோதிகள் இல்லை. காவி அணிந்து கொண்டு நல்லது செய்தால் அவர்களும் எங்கள் நண்பர்கள் தான். ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது.

 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றி ஆன்மீக சாதனை படைத்தது திமுக. நான் சொல்வதைக் கேட்டு பி.டி.ஆர் போன்றவர்கள் மனவருத்தம் அடையக்கூடாது. ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். ஒரு கோயில் இருக்கிறது, அது ஆண் தெய்வமாக இருக்கலாம் பெண் தெய்வமாக இருக்கலாம். கற்சிலையை வடிப்பவன் நம்மவன் தானே. அதை தூக்கிக் கொண்டு வந்து கர்ப்பகிரகத்தில் வைத்து பூசுவதும் அதுவும் நாமதானே. இவ்வளவும் பண்ணிய பிற்பாடு நாங்கள் உள்ளே வரும்போது நீங்கள் வெளியே போங்க தட்டை நாங்கள் தூக்கிக் கொள்கிறோம்; மணியை நாங்கள் தூக்கிக் கொள்கிறோம் என்று தட்டையும் மணியையும் நீங்கள் தூக்கிக் கொண்டால் நியாயமா? நான் கேட்கிறேன்... அந்த தட்டு என்ன அவ்வளவு வெயிட்டா? எங்க பசங்க தூக்கமாட்டாங்களா? அந்த தட்ட அந்த மணிய எங்களுக்கு ஆட்டத் தெரியாதா?'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்