![Minister Duraimurugan comment on Meghadatu issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/aszg2Hh9SsGtncFcMh9dK2Vq39eW576XHgt3YQGAVH8/1722682737/sites/default/files/inline-images/8_123.jpg)
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் - இலத்தேரி இடையே, ரூ.29 கோடியில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று அடிக்கல் நாட்டினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில் நடுவர் மன்றத்திற்குச் சென்றோம். நேரடியாகவே பட்டேலும் - கலைஞரும் பிரதமராக இருந்த தேவகவுடாவை வைத்துக்கொண்டே 3 நாட்கள் பேசினார்கள். அப்போதும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. பேச்சால் இந்த பிரச்சனை தீராது என்ற முடிவை மத்திய அரசுக்கு அனுப்பினோம். அதன்பின்னே வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், இப்போது தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் கர்நாடக அரசு பின்வாங்கும். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றால் இரண்டு வருடங்களுக்குக் காலதாமதம் ஆகும். அப்போது கர்நாடக அரசு பேச்சு வார்த்தையில் தீர்த்துக்கொள்கிறோம் என்று சொல்லும். அப்போது அந்த வழக்கு முடித்து அனுப்பிவிடும். பின்பு பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு அழைக்காது.
இப்படி இருக்கையில், பிரதமர் மோடி இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தற்கொலைக்கு சமம் ஆகும்” எனத் தெரிவித்தார்..