ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மக்களுடன் முதல்வர் முகாமை குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார்.
பின்னர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், தமிழகத்தில் வாட்டர் ரிசோர்ச்மெண்ட் - நீர்வளத்துறையில் வளர்ச்சி இல்லை என அன்புமணி கூறியது குறித்து கேட்டதகு, “அன்புமணிக்கு நீர்வளத்துறைப் பற்றி முழுமையாகத் தெரியாது. கலைஞர் ஆட்சியில் தான் 48 டேம் கட்டியுள்ளோம். காவேரி பிரச்சனை தீர்த்ததும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீர்த்ததும் திமுக தான்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் கட்சி தொடங்கி கொடி அறிமுகப்படுத்தியது குறித்துக் கேட்டதற்கு, “ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கவும், அரசியல் செய்யவும் கொடி ஏற்றவும் உரிமை உண்டு, அதை யாரும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.