கல்லூரி காலங்களில் ஒன்றாக பயின்ற மாணவர்கள் சிலர் படித்து முடித்து நல்ல வேலைகளில் இருக்கும்போது அவர்களின் திருமண நாள் மற்றும் பிறந்த நாட்களை கொண்டாடாமல், அவ்வாறு சேமிக்கும் பணத்தை ஏழை எளியவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு உதவி செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஜெக.சண்முகம் மகள் யாமினி. இவர் பொறியியல் படிக்கும் போது இவருடன் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர் தற்போது தொழிலதிபர்களாகவும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பணிகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கல்லூரி காலங்களில் பிறந்த நாள் மற்றும் திருமணமானால் குழந்தைகளின் பிறந்த நாள் திருமணநாட்களுக்கு அதிக பணம் செலவழித்து கொண்டாடகூடாது என்று கல்லூரி காலங்களில் முடிவெடுத்ததின் பேரில் அதற்காக ஒதுக்கப்படும் தொகையை கொண்டு பல்வேறு இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதும் கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்படும் போதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வகையான உதவிகள் செய்து வருகிறார்கள். இதேபோல் இவர்கள் நண்பர்களிடம் உதவிகளை பெற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட ஆர் ஓ வாட்டர் டேங்க் பிளாஸ்டிக்கால் உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு அந்த வாட்டர் டேங்கில் தண்ணீரை சேமித்து பயன்படுத்துவதால் பல்வேறு சிரமம் உள்ளது. பிளாஸ்டிக்கை மாற்றிவிட்டு ஸ்டைன்லேஸ் ஸ்டீல் டேங்காக மாற்றி தர வேண்டும் என சிதம்பரம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தமிழரசன், சீர்காழியில் உள்ள சமூக ஆர்வலர் யாமினியிடம் கடந்த டிசம்பர் மாதம் கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் இதுகுறித்து மற்ற நண்பர்களிடம் கோரிக்கையை வைத்தார். இந்நிலையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்கிருஷ்ணன் துபாயில் பணியில் உள்ளார். இவரது குழந்தை சஹானா, மித்ரா பிறந்தநாள் டிசம்பர் மாதம் வந்ததால் அதனை நானே செய்கிறேன் என்று உறுதி கூறி அதற்கான தொகை ரூ. 30 ஆயிரத்தை பெயரை சொல்லவேண்டாம் என்று கொடுத்தார். பின்னர் நண்பர்களின் அறிவுறுத்தலால் பெயர் சொல்வதற்கு அனுமதித்தார். அதனைதொடர்ந்து 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு உள்ள ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வாட்டர் டேங்க் செய்யப்பட்டது.
இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சீர்காழி சமூக ஆர்வலர் யாமினி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டு ஸ்டைன்லேஸ் ஸ்டீல் டேங்கை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் தமிழரசன் சிதம்பரம் பகுதி சமூக ஆர்வலர் இளங்கோவன் டயாலிசிஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த மருத்துவமனையில் 2 இயந்திரம் மட்டும் தான் உள்ளது அதில் ஒரு நாளைக்கு 2 அல்லது 4 பேர்தான் டயாலிசிஸ் செய்து கொள்ள முடியும். டயாலிசிஸ் செய்துகொள்ள 60-க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் காத்திருக்கிறார்கள். அதனால் கூடுதலாக ஒரு டயாலிசிஸ் இயந்திரம் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று தலைமை மருத்துவர் தமிழரசன் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற யாமினி ரூபாய் 8 லட்சம் மதிப்பில் ஒரு டயாலிசிஸ் இயந்திரம் நண்பர்களின் உதவியால் வாங்கித் தருவதாகவும் உறுதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்க எங்களுக்குள் ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு, அதனை நான் ஒருங்கிணைத்து ஏழைமக்களுக்கு பல்வேறு விதங்களில் உதவிகளையும் பல அரசு பள்ளிகளை தத்தெடுத்து நவீன வசதிகளை செய்து வருகிறோம். குறிப்பாக கடலூர் மாவட்டம் கீழகுண்டலபாடி கிராமம் கொள்ளிடகரையின் கடைசி கிராமம். இங்கு படிக்கும் குழந்தைகள் ஆற்றை தாண்டி தான் வரவேண்டும். எனவே அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக டேபிள், சேர், நோட் புக், புரஜெக்டர் கருவி, கம்பியூட்டர், சில்வர் தட்டு தம்ளர், வக்குபறைகளை நவீன வசதிகளுடன் புரனமைப்பு, பள்ளிகட்டிடத்திற்கு வண்ணம் தீட்டுதல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்.ஓ வாட்டர் என அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம்.
இங்கு தனியார் பள்ளிக்கு செல்லாமல் இந்த பள்ளிக்கு பல மாணவர்கள் வந்து கல்வி பயின்று வருகிறார்கள். தற்போது 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மேலும் அவர்களிடத்தில் சமூக பொறுப்புணர்வு பற்றியும் மரம் வளர்த்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறி மாணவர்கள் அனைவருக்கும் தென்னை மரகன்றுகளை வழங்கியுள்ளோம். அதனை நன்கு பராமரித்து வரும் மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வரை ஊக்க தொகையும் வழங்கி வருகிறோம். அதே போல் கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருவதாகவும் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் உதவி பொருட்களை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளேன்" என தெரிவித்தார்.