ஜல்லிக்கட்டு போராட்டதை மையமாக வைத்து 'மெரினா புரட்சி' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் இயக்குநர் ராஜ். படப்பிடிப்பு முடிந்து சென்சார் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிக்கப்பட்டு 80 நாட்கள் ஆகியும் இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ராஜ் வழக்கு தொடர்ந்தார். மனுவில், பொங்கல் திருநாளையொட்டி இந்தப் படத்தை எடுத்துள்ளோம். சென்சார் சான்றிதழுக்காக விண்ணப்பித்து 80 நாட்கள் ஆகியும் சான்றிதழும் வழங்கவில்லை, ஏன் வழங்கவில்லை என்பதற்கான காரணமும் சொல்லவில்லை. மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறார்கள். பொங்கல் திருநாளின்போது படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில் எந்த காரணமும் இல்லாமல் இரண்டு முறை எங்கள் படத்தை நிராகரித்திருக்கிறார்கள். ஆகவே விரைவில் எங்கள் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சுப்பிரமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா புரட்சி படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பாக 7 நாட்களுக்குள் தகுந்த பதில்கள் அளிக்குமாறு சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.