நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தாக்கப்பட்ட மாணவனின் படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் சார்பில் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மாணவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''இப்பகுதியில் நடந்த சிறு அசம்பாவிதத்தின் விளைவாக, தமிழக முதல்வர் எடுத்த விரைவு நடவடிக்கைகளின் காரணமாக காவல்துறையும் வருவாய் துறையும் விரைந்து செயல்பட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்றுபல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். படுகாயமடைந்த இரு சிறுவர்களும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு உயிர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற வகையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் விரைந்த நடவடிக்கையின் விளைவாக இருவரும் திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இருவருக்கும் தேவையான மனநல ஆலோசனைகளும் தற்போது மருத்துவர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இருவருக்குமே மிக தீவிரமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அறுவை சிகிச்சைகளும் நடைபெற்ற முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் நிதித்துறை அமைச்சரை அனுப்பி வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். நேற்று அதன்படி நிதித்துறை அமைச்சர் வந்து சம்பந்தப்பட்ட குழந்தைகளின் தாயிடத்தில் பேசி, முதல்வரிடம் நேரடியாக பேசும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார். நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அந்த ஆணையத்தின் வழியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்'' என்றார்.