சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அன்று அகில இந்திய ரயில் பயணிகள் நலக்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ் தலைமையில் உறுப்பினர்கள் கே.ரவிச்சந்திரன், அபிஜித் தாஸ், பி.மதுசூதனா, ஜி.வி.மஞ்சுநாத், கைலாஷ் லஷ்மன் வர்மா,சுனில்ராம் உள்ளிட்டோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை, மின்விசிறி ,காத்திருப்பு அறையில் போதுமான வசதிகள் டிக்கெட் வழங்கும் இடத்தில் என்ன வசதிகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரயில் நிலைய நடைமேடையிலிருந்த ரயில் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் கட்டணம் அதிகமாக உள்ளது என பயணிகள் கூறியதன் பேரில் ஆட்டோ கட்டணத்தை சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
பயணிகள் நலக்குழுவினரிம் சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமையிலான நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மனுவில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில்களும் சிதம்பரம் வழியாக கடலூர் வரை இயக்கவும் மற்றும் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மைசூர் ரயில்களை மயிலாடுதுறையிலிருந்து கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என மனு அளித்து வலியுறுத்தினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் முன்பதிவு இல்லா பயணிகள் வண்டிகள் குறைக்கப்பட்டுள்ளதையும், இங்கு முன்பதிவு இல்லா ஏற்கனவே சென்ற பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்வதாகவும் பயணிகள் நலக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.