தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் நாளை (02/08/2021) முதல் காலை 10.00 AM மணி முதல் மாலை 05.00 PM மணி வரை மட்டுமே கடைகள் திறக்கலாம். கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமையில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.உணவகங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிடலாம்; இரவு 09.00 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது;சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை. கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகம் வர கரோனா நெகடிவ் சான்று அல்லது கரோனா தடுப்பூசி சான்று அவசியம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகளில் ஆடி அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் தர்ப்பணம் செய்யவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து, கட்டாய கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.