திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே இருக்கும் ப.விராலிப்பட்டி கிராமத்தில் தொன்மையான கோட்டை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ப.விராலிப்பட்டி கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக ஆடுகளை வழங்குவர். அந்த ஆடுகளை ஊர் பொதுமக்களும், அறநிலையத்துறை நிர்வாகமும் பராமரித்து வருவார்கள்.
கோட்டை கருப்பண்ணசாமி கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அந்தக் கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இரவு திருவிழா நடைபெற்றது. இந்த இரவு திருவிழாவில் மொத்தம் மூன்றாயிரம் ஆடுகள் பலியிடப்பட்டு, விருந்து சமைத்து பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.
கோட்டை கருப்பண்ணசாமி கோயிலில் இரவில் நடைபெறும் இத்திருவிழாவில் பெண்கள் பங்கேற்பதற்கும், வான வேடிக்கை, மைக் செட், கோவில் திருவிழாவினை புகைப்படம் எடுக்க உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. அதேபோல், மது அருந்திவிட்டு வருவதற்கும் தடை. இப்படி பல கட்டுப்பாடுகளுடன் நடக்கும் திருவிழாவில் கோயிலில் முதலில் ஒரு ஆடு பலியிடப்பட்டு, பச்சை மண் பானையில் பொங்கல் வைத்து ஆகாச பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களால் கொடுக்கப்பட்ட சுமார் மூன்றாயிரம் ஆடுகள் கோயில் முன்பு பலி இடப்பட்டது. பலி கொடுக்கப்பட்ட ஆடுகளை ஊர் பொதுமக்கள் சமைத்து பிரசாதமாக தயார் செய்தனர்.
விடிய விடிய தயாரான கறி பிரசாதம், அதிகாலை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சூரிய உதயத்திற்கு முன்பு பலி கொடுக்கப்பட்ட ஆடுகளின் பாகங்கள் மற்றும் மீதமுள்ள பிரசாதங்கள் அனைத்தும் மிக பெரிய குழியில் போட்டு மூடப்பட்டன. ஓர் இரவு மட்டுமே நடந்த இந்தத் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கு வத்தலக்குண்டு போக்குவரத்து கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.