![Meeting of two winds; Rain waiting for Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/k1BZPvZJjxgHfOllTWnM-uBdnKZ47C0C2D8iQToFgPw/1682766068/sites/default/files/inline-images/1_446.jpg)
மே 1 ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும் மேற்கு திசைக்காற்றும் சந்திக்கும் நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் காரணமாக தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகரில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதேபோல் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களின் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மே 1ஆம் தேதியில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழக கடலோர பகுதிகள் இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.